நிலவில் விண்கலனை இறக்கிய ஜப்பான் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நிலவில் விண்கலனை இறக்கிய ஜப்பான் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நிலவில் விண்கலனை இறக்கிய ஜப்பான் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஜப்பானின் ஸ்லிம் என்ற விண்கலம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன்பின்னர் ஜப்பான் விஞ்ஞானிகள் எதிர்பார்த்திராத அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டது.
நிலவை ஆய்வு செய்வதற்கு, ஸ்லிம் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி, ஜப்பான் அனுப்பியது. 4 மாத பயணத்திற்கு பின்னர், இது, நிலவின் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சென்ற போது அதனை பாதுகாப்பாக தரையிறக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கினர். பின்பாயின்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் ஜப்பானின் ஆய்வு மையத்தில் இருந்தே விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது.
இதன்மூலம், நிலவில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான் 5-ஆவது நாடாக இணைந்துள்ளது. ஆனால், ஸ்லிம் விண்கலம் விஞ்ஞானிகள் திட்டமிட்ட கோணத்தில் துல்லியமாக தரையிறங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அதில் இருந்த சூரியத் தகடின் பேட்டரிகளின் ஆற்றல் குறைந்தது. இதனையடுத்து, ஸ்லிம் விண்கலம் சேகரித்த தரவுகள் அவசர அவசரமாக பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தில் உள்ள பேட்டரிகள் சூரிய ஒளி மூலம் தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக இந்த விண்கலனில் சார்ஜ் படிப்படியாக இறங்கிக் கொண்டு வந்துள்ளது.
லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் சோலார் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். இந்த பேட்டரிகள் செயல்படாததால் லேண்டரும் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகே, ஸ்லிம் விண்கலத்தின் செயல்பாடு வெற்றி அடைந்ததா இல்லையா என்பது தெரியவரும் என்று ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.