3 விரல்களை இழந்த விஜயகாந்த்..! இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி
3 விரல்களை இழந்த விஜயகாந்த்..! இறப்புக்கு பின்னர் வெளிவரும் சோக பின்னணி
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.
இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார்.
கால் விரல்கள் அகற்றப்பட்டது ஏன்?
சினிமா, அரசியல் என ஓய்வின்றி பம்பரமாய் சுழன்றுகொண்டு இருந்தவர் விஜயகாந்த். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பின்னர் உடல்நிலை மோசமானது.
சினிமாவில் முழுமையாக ஓய்வு நிலைக்கு சென்று அரசியலிலும் அதிகளவில் தலைகாட்டாமல் மருத்துவமனை, சிகிச்சை, வீடு என்று இருந்தார்.
அவரது பேச்சு குளறல், நிற்பது, நடப்பதில் தடுமாற்றம் அவரது அணு அணுவாக ரசித்து வந்த தொண்டர்களை கலங்க வைத்தாலும் கடந்த ஆண்டு அவருக்கு செய்த அறுவை சிகிச்சை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் உடல் நிலையை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரிவித்தனர். இதன் காரணமாக அவரது வலது காலில் உள்ள 3 விரல்களை அகற்ற வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்கள்.
மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரது கால் விரலை அகற்ற ஒப்புதல் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த 2022 ஜூன் மாதம் 20 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு விஜயகாந்தின் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டன.
இது தொடர்பாக தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தது. அதில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தி அறிந்து விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் முக ஸ்டாலினும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.