யாழில் “DJ Night” களியாட்ட நிகழ்வு : கிளம்பியது கடும் எதிர்ப்பு
யாழில் “DJ Night” களியாட்ட நிகழ்வு : கிளம்பியது கடும் எதிர்ப்பு ‘வடக்கில் DJ Night’ என்ற போர்வையில் அனுமதியின்றி இடம்பெறும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“DJ Night என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி குறித்த களியாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபடுபவர்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழலில் உள்ளோம்.
குறித்த நிகழ்வுக்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும். அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ். மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.
குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும்” என தெரிவித்தார்.