இருளில் மூழ்கியது காஸா; உயிர் காக்கும் பொருட்களையாவது அனுமதிக்குமாறு இஸ்ரேலிடம் ஐ.நா கோரிக்கை

இஸ்ரேல் 3,60,000 இராணுவ வீரர்களை காஸாவில் குவித்துள்ள நிலையில், தேவையேற்பட்டால் தரை வழியாகவும் முன்னேறித் தாக்கும் ஏற்பாட்டை செய்து வருகிறது.
இருளில் மூழ்கியது காஸா; உயிர் காக்கும் பொருட்களையாவது அனுமதிக்குமாறு இஸ்ரேலிடம் ஐ.நா கோரிக்கை

கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினர், கண்ணில் தென்பட்ட இஸ்ரேலியர்கள் பலரைத் தாக்கினர்.

இளம்வயது பெண்ணையும் ஆணையும் கட்டி வைத்து அவர்கள் தலையில் சுட்டது, உயிரோடு மக்களை எரித்தது, பெண்களைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது , வீரர்களின் தலையைத் துண்டித்தது என பல அக்கிரமங்களில் ஹமாஸ் குழுவினர் ஈடுபட்டதாக பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கவும் ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தொழிக்கவும் சபதம் ஏற்றுள்ளது இஸ்ரேல் அரசு.

இஸ்ரேலியர்கள் 150 பேர் ஹமாஸின் பிடியில் பணயக்கைதிகளாக உள்ளனர். மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதுடன், மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

ஒரே நாளில் அகதிகள் எண்ணிக்கை 30% அதிகரித்து 3,39,000 பேர் ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஸாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தயுள்ளது. அங்குள்ள ஒரே மின் நிலையமும் எரிபொருள் தீா்ந்துபோனதால் முடங்கியது.

ஏற்கனவே இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காஸா முனை மக்கள், மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காஸாவில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்களும் 30 ஐ.நா.வின் பாடசாலை மாணவர்களும் பலியானதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காஸாவில் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

காஸாவில் இருந்து 2,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காஸாவில் உணவு, எரிபொருள் விநியோகத்தை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

இதனால், உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”இஸ்ரேல் தான் எங்களின் ஆரம்ப இலக்கு. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும். லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பாலஸ்தீனர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும்,” என மஹ்மத் அல் ஜஹார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காஸாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்களை ஒவ்வொருவராக அனுப்பி தூக்கிலிடப்போவதாக அச்சுறுத்தி உள்ளனர்.

முன்னதாக, காஸாவை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது.

அதன் பிறகு காஸாவில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் ஏவுகணை தாக்குதல் நடத்துவது, அதற்குப் பதிலடியாக காஸாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது என்று பல ஆண்டுகளாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கிலோமீட்டர் வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், இராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா்.

இது தவிர, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை ஹமாஸ் படையினா் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 6 நாட்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button