பிரித்தானியாவில் 100,000 பிள்ளைகளின் பெற்றோர் சிறையில்: ஒரு அதிர்ச்சி ஆய்வு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சிறையில் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
தொண்டு நிறுவனம் கூறும் அதிரவைக்கும் தகவல்
Prison Advice and Care Trust என்னும் பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்றின் தரவுகளின்படி, பதிவு செய்தல் துவங்கியதில் இருந்து, இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சிறையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த தொண்டு நிறுவனத்தின் தரவுகள், சிறைச்சாலையிலிருப்போர் எண்ணிக்கை 87,793 ஆக உள்ளதாக தெரிவிக்கின்றன.
ஒரு தோராய கணக்கீட்டின்படி, ஒவ்வொரு ஆண் கைதிக்கும் சராசரியாக 1.14 குழந்தைகள் இருப்பதாக நீதித்துறையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு கூறுகிறது. ஆக, இந்தக் கணக்கீட்டின்படி, 100,084 குழந்தைகளின் பெற்றோர் சிறையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோரில் ஒருவராவது சிறையிலிருக்கும் பல குழந்தைகள் நேர்மறையான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துகிறார்கள். என்றாலும், கைதிகளின் குழந்தைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அவர்கள் மனநலப் பிரச்சனைகள், வீடற்ற தன்மை மற்றும் பிற்காலத்தில் வறுமை போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.