கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப் புலி பெண் போராளிகளின் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
பெண் போராளிகளின் மனித எச்சங்கள்
இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும் பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு அம் மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அவ் அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்,
” ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.