குழந்தை பிறக்கும் முன்பே பேரம்: ஆண் குழந்தைக்கு ரூ.1.5 லட்சம், பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம்
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் குழந்தை பிறப்பதற்கு முன்பே வறுமையால், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1.5 லட்சம் எனவும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் எனவும் தாய் பேரம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பேரம்
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி கோசங்கி தேவி. இவர், தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்பதற்கு முடிவு செய்தார்.
இதனால், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று அங்குள்ள ஊழியர் ஜெயாவை தொடர்பு கொண்டு, குழந்தையை விற்பது குறித்து பேசினார்.
இதன் பிறகு ஊழியர் ஜெயா, ஆட்டோநகரை சேர்ந்த ஷபானா பேகம் மற்றும் அமீனா பேகம் ஆகிய இருவரை கோசங்கி தேவிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரிடம் இருந்தும் முன்பணமாக ஐந்தாயிரம் ரூபாயை கோசங்கி தேவி பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1.5 லட்சம் எனவும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் எனவும் பேரம் பேசினார்.
பொலிசார் கைது
இந்நிலையில், கடந்த 4 ஆம் திகதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த ஜெயா, மருத்துவமனைக்கு வந்து எனக்கு தெரியாமல் எப்படி இரண்டு பேரிடம் முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார்.
அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்பு, இந்த வீடியோவை பொலிசாருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை பார்த்த பொலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.