பச்சிளம் குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை
பச்சிளம் குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார் வெல் தோட்டத்தில் 3 1/2 வயதுடைய ஆண் குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய சம்பவம் நேற்று (24) பதிவாகியுள்ளது.
6 பிள்ளைகளின் தந்தையே தனது 6ஆவது பிள்ளை மீது கொதி நீரை ஊற்றியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பிள்ளை மீது கொதி நீரை ஊற்றிய நபர் பிறிதொரு வழக்கில் ஆஜராகுவதற்காக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் அவ்விடத்திலே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையின் தாய் கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் பணியாற்றி வரும் நிலையில், பிள்ளைகள் பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்து வருகின்றனர். நேற்றிரவு பிள்ளைகளின் பாட்டிக்கும் தந்தைக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாகவே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை நிருபர் – சுஜித் சுரேன்