பல சர்ச்சைக்கு மத்தியில் திரைப்படமாகும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் (17-04-2023) காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல் நடிக்கிறார்.
எம்.எஸ்.சிறிபாதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கும் அதேவேளை கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிப்பதாக தெரியவந்துள்ளது.