சுரங்கப்பாதைக்கு அருகே மயங்கி கிடந்த சிறுவன்: அதிர்ச்சியடைந்த பொலிஸார்!
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மீஜியாங் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்கப்பாதை அருகே சிறுவன் ஒருவன் மயங்கி கிடந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறுவன் மயங்கி கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு அவனிடம் விசாரித்த போது, அந்த சிறுவன் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாலையில் மயங்கி கிடந்த சிறுவனுக்கு 11 வயது ஆகிறது. மீஜியாங் பகுதியில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெஜியாங் பகுதியை சேர்ந்தவன். சிறுவனை அவனது தாயார் திட்டியுள்ளார்.
இதில் கோபமடைந்த சிறுவன், தனது பாட்டியிடம் கூறிவிடுவதாக தாயாரை மிரட்டி உள்ளார். அதற்கும் தாயார் சிறுவனை கண்டித்துள்ளார்.
சிறுவனின் பாட்டி வீட்டுக்கு அவன் இருந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சென்று விடலாம். இதனால் அந்த சிறுவன் தாயார் பற்றி பாட்டியிடம் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளான்.
இதற்காக சம்பவத்தன்று மாலை, வீட்டில் இருந்து சைக்கிளில் பாட்டி வீட்டுக்கு தனியாக புறப்பட்டு சென்றுள்ளான். சாலையில் உள்ள வழிகாட்டி பலகை உதவியுடன் பயணம் செய்தான். ஆனால் இடையில் வழியை மறந்துவிட சுமார் 130 கிலோ மீட்டர் பயணம் செய்து எக்ஸ்பிரஸ் சுரங்கப்பாதை அருகே மயங்கி விழுந்துள்ளான்.
சிறுவனிடம் நடத்திய விசாரணையில் இதனை அறிந்து கொண்ட பொலிஸார் சிறுவனின் சாகச பயணத்தை கேட்டு அதிர்ந்து போனார்கள். பின்னர் அவர்கள் பொலிஸ் ஜீப்பில் ஏற்றி சிறுவனை அவனது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பிலான தகவல் அவனது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்து சிறுவனை அழைத்து சென்றனர்.
இச் சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.
இரவு முழுவதும் சிறுவன் சைக்கிளில் தனியாக பயணம் செய்ததும், தாயார் பற்றி முறைப்பாடு கூற பாட்டி வீட்டுக்கு சென்றதும் குறித்து பலரும் ஆச்சரியப்பட்டு கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.