கற்பதற்கு சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த சோகம்; வெளிவந்த பின்னணி!
கடந்த மார்ச் 06, 2021 அன்று ஜப்பானின் நகோயா தடுப்பு மையத்தில் விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க (33) முறையான சிகிச்சை கொடுக்கப்படாமல் இறந்த விதத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் முதன்முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதே சமயம் இதுகூட தணிக்கை செய்யப்பட்டது என பிந்திய தகவல்கள் வழி தெரிவிக்கப்படுகிறது. சந்தமாலி, தன்னால் சுவாசிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்த போதும், தடுப்பு மைய அதிகாரிகள் அதை பெரிதுபடுத்தவில்லை என காட்சிகள் மூலம் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் சந்தமாலி இறந்து போனார்.
அப்போது அவருக்கு வயது 33 . விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க 2017 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மாணவர் வீசாவின் கீழ் ஜப்பான் சென்றுள்ளார். விசா காலாவதியான பிறகு, புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் அவருக்கு ஜப்பானிய அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 2020ல் கைது செய்யப்பட்ட , விஷ்மா சந்தமாலி , ஜப்பானில் உள்ள நகோயா தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார். அவர் பல மாதங்களாக முகாமில் இருந்த சமயம், ஜனவரி 2021 இல் நோய்வாய்ப்பட்டுள்ளார்.
வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்ட அவரது உடல்நிலை, முறையான மருத்துவ சிகிச்சை இல்லாததால் மோசமானதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இச்சமயத்தில், விஷ்மா சந்தமாலியின் எடை 19 கிலோ குறைந்து, அவரால் தனியாக நிற்கவோ அல்லது உடை மாற்றவோ முடியாத அளவுக்கு பலவீனமாகியுள்ளார். இறுதியாக முகாமில் தற்காலிக மருத்துவர் ஒருவர் பரிசோதித்த போதும் அங்கு விஷ்மா சந்தமாலிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
விஷ்மா சந்தமாலிக்கு நோய் இருப்பதாக போலியாக நடிப்பதாக எண்ணிய அதிகாரிகள், மார்ச் 4-ம் தேதி மனநல மருத்துவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளனர். விஷ்மா சந்தமாலிக்கு மனநோய் எதுவும் இல்லை என்பது தெரியவந்தாலும், மனநோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் விஷ்மா சந்தமாலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மார்ச் 06, 2021 அன்று, விஷ்மா சந்தமாலி சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததால் இறந்து போனார், அதன்பின் அவரது உடலை அடையாளம் காண அவரது குடும்பத்தினர், ஜப்பானுக்கு அழைக்கப்பட்டனர்.
விஷ்மா சந்தமாலியின் உடலை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரிகள் , வரவேற்பு மையத்தின் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் நவம்பர் 2021 இல் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.
ஜப்பானிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், மருத்துவ சிகிச்சை வழங்குவது தடுப்பு மையங்களின் தலைவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருப்பினும், விஷ்மாவின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான குறிப்பிட்டதொரு காரணம் இல்லாதது சிக்கலாக உள்ளது. அங்கு வழக்குத் தாக்கல் செய்த சகோதரிகளான வயோமி ரத்நாயக்க மற்றும் பூர்ணிமா ரத்நாயக்க ஆகியோரின் சட்டத்தரணிகள் , விஷ்மா சந்தமாலி தங்கியிருந்த அறையின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றில் வழங்குமாறு கோருகின்றனர்.
இதனடிப்படையில் 2021 பிப்ரவரி 22 முதல் மார்ச் 6 வரை விஷ்மா சந்தமாலி தங்கியிருந்த அறையின் சிசிடிவி காட்சிகளை ஜப்பான் அரசு , நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் முதன்முறையாக ஊடகங்களில் வெளியாகியதால், விஷ்மா சந்தமாலியின் மரணம் குறித்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள நகோயா தடுப்பு முகாமில் உணவு மற்றும் உரிய சிகிச்சைகள் இன்றி உயிரிழந்த விஷ்மா சந்தமாலி ரத்நாயக்கவுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சி.சி.டி.வி காட்சிகள் , விஷ்மா சந்தமாலி சார்பாக வாதிடும் சிவில் ஆர்வலர்கள் , ஜப்பானிய அரசாங்கம், நீதித்துறை போன்றவற்றை மீண்டும் செயல்பட வைக்க ஊன்றுகோலாகியுள்ளது.
இதுகுறித்து விஷ்மா சந்தமாலியின் சகோதரி வயோமி நிசன்சாலா கூறுகையில், இந்த வீடியோவை பார்த்து “எங்கள் குடும்பத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் முடிவெடுப்பார்கள் என்றும், எனது சகோதரிக்கும் பெரிய அநீதி இழைத்திருப்பதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்கள் ஊடகங்கள் வழியாக வெளியாகியுள்ள நிலையில் , ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சண்டமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த வியாழன் அன்று ஜப்பானில் அவரது குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முதன்முறையாக ஊடகங்களுக்கு இக் காட்சிகளை வெளியிட்டபோது அது பரவலான சமூக கவனத்தைப் பெற்றது.
இந்தக் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியான நிலையில், நேற்று பிற்பகல் ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜப்பானிய நீதி அமைச்சரிடம் ஊடகங்கள் வினவியபோது, “இந்த வீடியோக்கள் அரசாங்கத்தால் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டவை.
இந்த வீடியோக்கள் சுமார் 5 மணி நேரம் கொண்டவை, அந்த வீடியோக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன. இந்த வீடியோக்களில் ஒரு பகுதி புகார்தாரரால் , அனுமதியின்றி எடிட் செய்யப்பட்டு, அந்த வீடியோக்கள் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.” என ஜப்பான் நீதித்துறை அமைச்சரான கென் சைத்தோ தெரிவித்துள்ளார்.