ட்ரம்ப் சரணடைவார்; ஆனால் ஆஜராகமாட்டார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாளை சரணடைவார் என கூறப்படும் அதேவேளை, அவர் நீதிமன்றத்தில் கைவிலங்குடன் ட்ரம்ப் ஆஜராகமாட்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆபாசப்பட நடிகை சர்ச்சை
ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ட்ரம்ப் தரப்பினால் 130,000 டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு விசாரணை நடத்துவதற்கு நியூயோர்க் ஜூரிகள் குழாம் அங்கீகாரம் அளித்தது.
டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான விசாரணை நியூயோர்க் நேரப்படி நாளை பிற்பகல் 2.15 (இலங்கை நேரப்படி இரவு 11.45) மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தற்போது புளோரிடா மாநிலத்தில் தங்கியுள்ள ட்ரம்ப், தனது சொந்த விமானம் மூலம் இன்று நியூயோர்க் செல்வார் எனவும், அவர் அதிகாரிகளிடம் சரணடைவார் எனவும் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத, அமெரிக்க சமஷ்டி அரச அதிகாரி ஒருவர் சிபிஎஸ் அலைவரிசையிடம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தேக நபர்களுக்கே கைவிலங்கிடப்படும் என கூறியஅந்த அதிகாரி எனினும் ட்ரம்புக்கு கைவிலங்கு போடப்பட மாட்டாது.
வழக்கு உலகின் கவனத்தை ஈர்த்த ட்ரம்ப் வழக்கு
இதேவேளை, நாளை அவர் நீதிமன்றில் சரணடையக்கூடும் ஆனால் எதுவும் நிச்சயமில்லை என டொனால்ட் டரம்பின் சட்டத்தரணி ஜோ டகோபினா கூறியுள்ளார்.
அத்துடன் தான் நிரபராதி என வாதாடுவார் எனவும் டகோபினா கூறியுள்ளார். 76 வயதான டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வழக்கு தனக்கு எதிரான அரசியல் உள்நோக்கமுடையது என அவர் கூறிவருகிறார்.
அதேவேளை, ட்ரம்ப் மீதான வழக்கு குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுமுன்தினம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
மேலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி எவரும் இதற்கு முன்னர் குற்றவியல் வழக்கை எதிர்கொண்டதில்லை. இதனால் ட்ரம்ப் மீதான வழக்கு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.