இத்தாலியில் ஆங்கிலத்தை பயன்படுத்த தடை; மீறினால் அபராதம்: இத்தாலி அரசின் முடிவு!
இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கில உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்குப் பதிலாக வெளிநாட்டுச் சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
இத்தாலியப் பிரதிநிதிகள் சபையில் (லோயர் ஹவுஸ்), அந்த நாட்டின் அமைச்சர் ஃபேபியோ ராம்பெல்லி, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அறிமுகப்படுத்தி முன்மொழிந்துள்ளனர்.
இழிவுபடுத்துவதுபோல இருக்கிறது
இந்தச் சட்டத்தின்படி, இத்தாலியில் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், ஒரு இலட்சம் யூரோ (இலங்கை ரூபாவில் சுமார் 3.6 கோடி இலட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏனென்றால் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு, இத்தாலிய மொழியை இழிவுபடுத்துவதுபோல இருக்கிறது என்று `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ குறிப்பிட்டிருக்கிறது.
இனி கட்டாயமாகும்
மேலும், நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் பெயர்கள், குறியீடுகள் உட்பட அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடைசெய்கிறது.
எனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து உள் கட்டுப்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் இத்தாலிய மொழிப் பதிப்புகளைக்கொண்டிருக்க வேண்டியது இனி கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.