நாட்டை ஒப்படையுங்கள்: கெடு விதித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
நாட்டை ஒப்படையுங்கள்: கெடு விதித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...
நாட்டை ஒப்படைப்பதோடு மட்டுமல்லாமல் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஒருபக்கம் இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக மோதல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், இன்னும் நான்கு நாட்களுக்குள் ராஜினாமா செய்யுமாறு ட்ரூடோவுக்கு அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்!
பிரதமருக்கு கெடு
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 28ஆம் திகதிக்குள் ராஜினாமா செய்யவேண்டும் என்றும், மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அவர் சார்ந்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
தனது கட்சி உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்திய ட்ரூடோ, சந்திப்புக்குப் பின் புன்னகையுடன் லிபரல் கட்சி உறுப்பினர்கள் வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதாக பேட்டியளித்தார்.
ஆனால், இன்னொருபக்கம், அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களே, பிரதமருக்கு நாள் குறித்துள்ளார்கள்.
20க்கும் அதிகமான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ட்ரூடோ அடுத்த தேர்தலுக்குள் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக, அக்கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தக் கடிதம், மூன்று மணி நேரம் நீடித்த கட்சிக்கூட்டத்தில் ட்ரூடோவுக்கு முன் வாசிக்கப்பட்டதாகவும், ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது என்றும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், இன்னும் நான்கு நாட்களுக்குள், அதாவது, அக்டோபர் 28ஆம் திகதிக்குள் ட்ரூடோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்பில் முடிவெடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பின் ட்ரூடோ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலே சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.