Breaking News

சிங்கப்பூரில் தந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற 15 வயதுச் சிறுவன்

சிங்கப்பூரில் தந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற 15 வயதுச் சிறுவனுக்கு 5 ஆண்டுகள் தடுப்புக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பழங்களை வெட்டும் கத்தியைக் கொண்டு தந்தையைக் கழுத்தில் குத்திக் கொலை செய்தததைச் சிறுவன் ஒப்புக்கொண்டான்.

கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சிறுவனுக்கு 5 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தந்தையுடனும் தம்பியுடனும் வீட்டில் இருந்தான் சிறுவன்.

துணி துவைக்க பயன்படுத்தப்படும் சோப்புத் தூளை எடுக்கும் கரண்டி காணாமல் போனதால், அதை அவன் ஒளித்து வைத்தானா என்று தந்தை அவனிடம் கேட்டார்.

அதை மறுத்த சிறுவனுக்குக் கோபம் வந்தது. இருப்பினும் சோப்புத் தூளை எடுக்க உதவினான். பின்னர், அவன் அந்தக் கரண்டியைத் தூக்கி எறிந்துவிட்டதாகத் தந்தை தம்பியிடம் சொன்னதைக் கேட்ட சிறுவன் மேலும் கோபமைடந்தான்.

சமையலறையில் மீண்டும் காணாமல் போன கரண்டியைப் பற்றி மீண்டும் அவனின் தந்தை அவனைக் குறைகூறினார். அதைத் தொடர்ந்து, பழங்களை வெட்டும் கத்தியைப் பயன்படுத்தித் தந்தையைக் கழுத்தில் குத்தினான் அந்தச் சிறுவன்.

சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தந்தை, மாண்டுவிட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. சிறு வயதிலிருந்தே அவனுக்குத் தொடர்புத் திறன் குறைபாடு இருந்ததால், தொடக்கநிலை 1 முதல் சிறப்புத் தேவையுள்ளோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

2018ஆம் ஆண்டில் அவனுக்கு இணையத்தளத்தில் அளவுக்கு அதிகமாக விளையாடும் குறைபாடு இருந்ததாகக் கண்டறியப்பட்டது. தாயுடனும் தம்பியுடனும் அன்பான உறவைக் கொண்டிருந்த சிறுவனுக்குத் தந்தையுடன் சுமுகமான உறவு இல்லை.

சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts