கில்மிஷா, அசானி விடயத்தில் “தங்கமங்கை” இந்துகாதேவியை மறந்த ஈழத்தமிழர்கள்.!!
கில்மிஷா, அசானி விடயத்தில் "தங்கமங்கை" இந்துகாதேவியை மறந்த ஈழத்தமிழர்கள்.!!
கில்மிஷா, அசானி விடயத்தில் “தங்கமங்கை” இந்துகாதேவியை மறந்த ஈழத்தமிழர்கள்.!! திறமைகள் மதிக்கப்படவேண்டியவை.. போற்றப்படவேண்டியவை. அதிலும் வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர் வேறு நாடுகளுக்கு சென்று வெற்றிவாகை சூடி வருவதென்பது இலகுவான காரியம் அல்ல.
ஆனால் அண்மையில் இலங்கை யாழ்ப்பாணத்திலும் மலையகத்திலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சில விடயங்களை பார்த்தால் வடிவேல் பாணியில் ஏன்டா இது உங்களுக்கே ஓவரா தெரியல்லையா எனத்தான் கேட்கத்தோன்றுகிறது.
இந்த செய்தி தொகுப்பு யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காகவோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் செயல்பாடோ அல்ல என்பதை ஆரம்பத்திலையே தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
;ஆக கருத்து வேறுபாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால் ஒரு விடயத்தை பொதுவாக பார்த்து அசல வேண்டியது ஊடகத்தின் கடமை என்ற நோக்கில் எமக்கு இருக்கும் கேள்விகளே இங்கு தொடுக்கப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் இலங்கையின் மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் ஒரே கொண்டாட்டம். ஏன் எதற்கு என்றால் பாடல் போட்டியில் கலந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றதற்காக கில்மிசா என்ற அந்த சிறுமிக்கு அரசல் புரசலாக கடும் கவனிப்பு. ஒரு விஐபி வந்தால் எப்படியான கவனிப்பு இருக்குமோ அந்தளவுக்கு வச்சு கவனித்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்து மக்கள்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறும் மலையகத்திலும் அசானி என்ற சிறுமிக்கும் கவனிப்புகள் பலமாக இருந்தது. மலையக மக்களை பொறுத்த மட்டில் அவர்களுக்கு அது ஒரு மாபெரும் வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது. காரணம் பல சகாப்தங்களாகவே இலங்கையில் பொருளாதார ரீதியில் அதே நிலமையில் இருக்கும் ஒரே சமூகம் அப்பாவி மலையக மக்கள்தான்.
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து கடல் கடந்து இந்தியா சென்று “சரிகமப” நிகழ்ச்சியில் அத்தனை போட்டியாளர்களையும் பின்தள்ளி, தனது திறமையால் மட்டும் இறுதி சுற்றுவரை வந்த அந்த சிறுமி நிச்சயம் அவர்களுக்கு ஒரு சொத்துதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அம்மக்களை குறைசொல்வதில் அர்த்தமில்லை. தமது மகிழ்ச்சியை மக்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதன் தோற்றமே அந்த வரவேற்பு காட்சிகள். இருந்தும் மலையகத்தில் அசானி அரசியல் மேடையில் ஒருவரிடம் பரிசு வாங்கியபோது அதற்கும் அங்குள்ள மக்கள் விமர்ச்சிக்கத்தவறவில்லை.
அது எல்லாம் சரிதான் நம்ம யாழ்ப்பாணத்து மக்கள் கொஞ்சம் ஒரு படி மேலே போய் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது போல, கில்மிசாவுக்கு அதீத கவனிப்பு அளித்த விடயம்தான் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாக இருக்கிறது. பலரும் பலவிதமாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
திறமை.. அதற்கான அங்கீகாரம்.. பாராட்டுவிழா.. மகிழ்ச்சியின் வெளிப்பாடு இப்பயெல்லாம் எடுத்துக்கொண்டாலும், காசு உள்ளவன் பிழைத்துக்கொள்வான் என்பதுபோல் இருக்கிறது அவர்களது செயற்பாடுகள். உண்மையில், அண்மைக்காலமாக யாழில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. யுத்தம் முடிந்து இப்போதுதான் ஒரு சில தென்னிந்தியாவை சேர்ந்த ஈழத்து மருமகளுக்கும், ஈழத்துமருமகனுக்கும் ஈழம் எங்கே இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
இப்போதுதான் அவர்களுக்கு ஈழத்தில் இசைநிகழ்ச்சி நடத்தவும் ஈழத்து ஆலயங்களை தரிசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களை தலையில் வைத்து கொண்டாடும் யாழ்ப்பாண மக்கள் மேலைத்தேய கலாசார DJ என்கின்ற களியாட்ட நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறது.
“சரிகமப” வெற்றியாளர்கள் விடயத்துக்கு வருவோம். திறமைகள் மதிக்கப்படவேண்டியவை, கொண்டாடடப்படவேண்டியவை, போற்றப்படவேண்டியவை எமது கலைஞர்களுக்கு நாம்தான் மதிப்பளிக்க வேண்டும். எமது இளம் கலைஞர்களை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும். எமது இளம் கலைஞர்களை நாம்தான் கௌரவிக்க வேண்டும். அது எப்படி, எவ்வாறு என்பது எங்கள் தனிப்பட்ட உரிமை. அதை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.. இப்படியெல்லாம் வரிஞ்சு கட்டிக்கொண்டு நீங்கள் கேட்க நினைப்பதெல்லாம் எமக்கும் புரியாமல் இல்லை.
அதே உங்களிடம்..!!! நாம் ஒரு கேள்வியை முன் வைக்கிறோம். இவ்வாண்டு ஆரம்பத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றது.
“பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குப்பற்றி முல்லைத்தீவினை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த விடயத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம். அது சரி கவனிப்புகள் பலமாக இருந்திருந்தால்.. ஊடகங்கள் அதை பேசி பேசி ஊதிப்பெருப்பித்திருந்தால் இன்னும் நினைவிருந்திருக்கும்.
பாகிஸ்தான் – லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50_ 55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் குறித்த யுவதி பங்குப்பற்றி தங்கப்பதக்கம் வென்று எமது மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது திறமை மீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின்; ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கிராமமாக அமைக்கப்பட்ட இடமே புதிய நகர் கிராமமாகும் .
பழைய கண்டி வீதிக்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் போதியளவு அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்துக்கு வீதி வசதி இல்லை. பொது போக்குவரத்து சேவை இல்லை. வயற்காணிகளுக்கு நடுவில் இவர்கள் வாழ்ந்தாலும் இவர்களுக்கு வயற்காணிகள் இல்லை. பெரும்பாலும் உடல் உழைப்பினை நம்பி வாழும் தொழிலாளர்கள் தான் அதிகம்.”
இவ்வாறு வறுமையும் வாழ்வின் சுமைகளையும் சவாலாக கொண்டு கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தது எவ்வளவு பெரிய விடயம்.
அந்த சாதனை சிறுமியை யாழில் உள்ள அதாவது வடமாகாணத்தில் உள்ள எத்தனை தமிழர்கள் விமானநிலையம் வரை சென்று வரவேற்று, பட்டுக்கம்பளம் விரிந்து, பல்லக்கில் தூக்கிச்சுமந்து,மேளதாளங்களுடன் வரவேற்று, ஊர் ஊராய் பவணி கொண்டு சென்றீர்கள். ஒரு கடவுளுக்கு சமமாக தேரில் வைத்து ஊரில் சுற்றித்திரியாவிட்டாலும் பரவாயில்லை. அச்சிறுமியும் கடல்கடந்து வறுமையிலும் சாதித்து காட்டியவர்தானே.. அப்போது எங்கே போனீர்கள் நீங்கள்..?
ஒரு சில “யாழ்ப்பாணத்தானுக்கு மண்டை சரியில்லை” ” அவர்களுக்கென்ன ஐரோப்பாவில ஆட்கள் இருக்கினம் காசு மிஞ்சுப்போச்சு” “அவர்கள் உயர்ந்த சாதியடப்பா” என மக்கள் சமூக ஊடங்களில் புலம்பும் சத்தம் உங்கள் செவிகளில் கேட்டிருக்கும் என நினைக்கிறோம்.
முல்லைத்தீவினை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி என்கின்ற குறித்த சிறுமிக்கு பலர் உதவிகளை செய்திருக்கிறார்கள் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பலர் பாராட்டி செவ்வி எடுத்திருக்கிறார்கள். பல ஊடகங்கள் அவர் பற்றி பெருமையாக எழுதியிருக்கிறது. அதுவெல்லாம் சரிதான். ஆனால் நாம் இங்கே இதை சுட்டிக்காட்ட காரணம் எதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதற்காகவே.
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்” என சமூகவலைத்தளத்தில் பலரின் விமர்சனங்களை பார்த்த பின்புதான் நாமும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்த அந்த சிறுமியை இவர்களெல்லாம் ஏன் மறந்தார்கள் என்ற கேள்வியை கேட்கவேண்டும் என தோற்றியது. மற்றபடி திறமைகள் என்றும் மதிக்கப்படவேண்டியவை கொண்டாடப்படவேண்டியவை. ஆனால் நமது கொண்டாட்டங்கள் மற்றவர்கள் மனைதை புண்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே திண்ணம்.