செங்கல்லால் அடித்து கணவனைக் கொன்ற மனைவி
செங்கல்லால் அடித்து கணவனைக் கொன்ற மனைவி
செங்கல்லால் அடித்து கணவனைக் கொன்ற மனைவி தருமபுரியில் நடத்தையில் சந்தேகம் அடைந்து துன்புறுத்திய கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜா – கனகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநரான ராஜா கடந்த 30 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ள வரட்டாறு கால்வாயில் இறந்து கிடந்தார்.
அவர் இயற்கையாக இறந்ததாக நினைத்து, காவல் துறையினருக்கு தெரியாமல், ராஜாவின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கீரைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அரூர் வட்டாட்சியர் கனிமொழி, காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட ராஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே வைத்து உடற்கூறாய்வு செய்து, பின்னர் மீண்டும் உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ராஜாவின் மனைவி கனகா அரூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்போது கனகாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, கணவனை கொலை செய்த விவரம் அம்பலமானது.
மது போதைக்கு அடிமையாகி இருந்த ராஜா, தனது மனைவி கனகா மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கடந்த 6 மாதமாக ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது போதையில் கனகாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் ராஜா. இதனால், ஆத்திரமடைந்த கனகா அருகில் இருந்த செங்கலால் ராஜாவை தாக்கியும், அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் கனகா தெரிவித்துள்ளார்.
பின்னர் ராஜாவின் உடலை இழுத்துச் சென்று வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் போட்டுவிட்டு வந்ததாகவும் கனகா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கனகா மீது கொலை மற்றும் தடயங்களை மறைத்ததாக வழக்குப்பதிவு செய்த அரூர் காவல் துறையினர், அவரை கைது செய்தனர்.
ராஜாவை கொலை செய்ய கனகாவிற்கு வேறு யாரும் உதவினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.