லிபியா வெள்ள பேரிடரில் சிக்கி 11,300 பேர் உயிரிழப்பு: சர்வதேச செம்பிறைச் சங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
லிபியா நாட்டில் புயல் காரணமாக அணைகள் உடைந்து நீர் ஊருக்குள் புகுந்ததில் இதுவரை 11,300 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊருக்குள் புகுந்த நீர்
வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் கடந்து சென்றது.
இந்த புயல் காரணமாக லிபியா நாட்டின் வாடி டெர்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த இரு தடுப்பணைகள் உடைந்து நீரானது ஊருக்குள் பாய்ந்தது.
இதனால் லிபியா நாட்டின் டெர்னா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரானது பாய்ந்தது.
11,300 பேர் உயிரிழப்பு
வெள்ள நீரானது வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களுக்கு திடீரென புகுந்ததில் ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக நாட்டின் சுகாதாரத் துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், அணை வெள்ளத்தில் சிக்கி 5,500 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது.
ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்து இருப்பதாக சர்வதேச செம்பிறைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் 10,100 பேர் வரை மத்திய தரைக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சர்வதேச செம்பிறைச் சங்கத்தின் பொது செயலாளர் மரியே அல்-ட்ரெசி, லிபியா நாட்டின் அணைகள் உடைந்து ஏற்பட்டுள்ள இந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.