வாழ்நாள் முழுவதும் குளிக்காமல் இருக்கும் விசித்திர மக்கள்..!!
வாழ்நாள் முழுவதும் குளிக்காமல் இருக்கும் விசித்திர மக்கள்..!! “ஹிம்பா”(Himba) என்ற இனத்தவர்கள் பற்றி இன்று பேசுவோம். இவர்களுடைய மொழியில் இந்தச் சொல் “பிச்சைக்காரன்” என்று பொருள்படுகிறதாம் ….
பயிர்பச்சைகளை விளைவிக்க நிலத்தையும், மேய்ப்பதற்கு கால்நடைகளையும் தேடி அலைந்த ஒரு நாடோடிக் கூட்டம் என்பதால், இவர்களுக்கு இப்படி ஒரு பெயர் கிடைத்தது என்கிறார்கள்…
அம்மா சோளக் கழி கிண்ட, பக்கத்தில் வாரிசு…

தங்கள் முக அலங்காரத்திற்காக பல வகையான கிரீம்களை, பெருவிலை கொடுத்து வாங்கும் இன்றைய இளம் பெண்களுக்கு, நான் சொல்லப் போவது வேடிக்கையான தகவலாக இருக்கலாம்.
பல இனக் கற்களைப் பொடிசெய்து களிமண், பட்டருடன் கலக்கிறார்கள். பின்பு புகையூட்டி, இதை இலேசாகச் சூடாக்குகிறார்கள். இதையே உடம்பில் பூசிக் கொள்கிறார்கள் இங்குள்ள பெண்கள்!
அட எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?
ஹிம்பா இன ஆண்கள்……

ஒரு உல்லாசப் பயணி, “ஆணைப் பெண்ணிடமிருந்து பிரித்துக் காட்டத்தான்” என்கிறார். … அப்படியானால் மற்றைய காரணங்கள்…ஆபிரிக்க காட்டு யானைகள், எரிக்கும் வெயிலில், பூச்சிக் கடியில் இருந்து உடலைப் பாதுகாக்க, பட்டை பட்டையாக தம் உடல் மீது சேற்றை வாரியிறைப்பது போன்றதுதான் இதுவும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தம் உடலில் இவர்கள் பூசிக் கொள்ளும் செந்நிற களிமண் கலவை , சூரிய கதிர்களின் தாக்கத்தை தடுப்பதுடன், தோலை ஈரலிப்போடும், துப்பரவாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றது என்கிறார்கள். உடம்பில் உரோமம் வளராது தடுக்கவும் கைகொடுக்கின்கிறது….
“முடி”சூடும் “இராணிகள்”..

நாம் நமீபியா என்ற தென் ஆபரிக்க நாட்டில் நிற்கிறோம். கிரிக்கெட் விளையாடும் ஸம்பியா இவர்களது ஒரு எல்லை நாடு….இவர்கள் கலாச்சாரத்தின் வினோதமான பழக்கவழக்கங்களில் பெண்கள் முடிசூடிக் கொள்வதும் ஒன்று…..
முடி சூடிய காட்டு இராணிகள் இவர்கள்…
படத்திலுள்ள ஹிம்பா பெண்ணை உற்றுப் பாருங்கள். வயதுக்கு வந்து விட்ட பெண்களின் தலையில் ஹிம்பா முடி ஒன்றைக் காணலாம். பசு அல்லது ஆட்டின் தோலில் செய்யப்பட்டது இது!. தன் சுகாதாரத்தை தானே கவனித்துக் கொள்வேன் என்ற நிலை ஒரு பெண்ணுக்கு வந்ததும், களிமண் கலவையை இவள் தன் உடம்பில் பூசிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறாள் . ஆண்களுக்கு இந்தப் பழக்கம் அறவே இல்லை…
கஞ்சியோ கூழோ குடிப்பார்கள்…

வறுமை நிலையை வெளிப்படு்த்த கஞ்சியோ கூழோ குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம் என்று சொல்வதுண்டு. இவர்களது பிரதான உணவே சோளக் கஞ்சிதான். தண்ணீரை கொதிக்க வைப்பார்கள்…அதற்குள் தேவைக்கேற்றவாறு சோள மாவைக் கொட்டுவார்கள்..கம்பால் கிளறி விட்டால் . சோளக் களி(கஞ்சி) ரெடி….பரிமாறும்போது இலேசாக எண்ணெய் சேர்ப்பதுண்டு….சமயா சமயங்களில் முத்து தினை(pearl millet) மா களியும் உணவுக்கு பரிமாறப்படும். மிக அரிதாக, திருமணம் போன்ற வைபவ நேரங்களில் , இந்தக் களியுடன் மாமிசம் சேர்த்து உண்ணப்படுவதுண்டு…..(மாமிசப் பிரியர்களே காட்டு வாழ்க்கையை சற்றே கவனிக்கவும். காடு நிறைய விலங்குகள் இருந்தும், அரிதாகவே மாமிசத்தை உண்ணும் ஒரு அபூர்வ இனத்தவர் இவர்கள்)
வயதுக்கு வந்தவரும் வராதவரும்
ஆவி உலகில் ஈடுபாடு அதிகம்….
ஆன்மவாதி என்று சொல்லப்படும் ஆவி உலகக் கோட்பாளர்கள் இவர்கள்…Mukuru என்று தங்கள் உலகநாதனை (supreme being ) அழைக்கிறார்கள்.தீயை மூட்டி அந்தத் தீ நாக்குகளின் ஊடாக, தங்கள் மூதாதையருடன் தொடர்பு கொள்கிறார்கள் இந்த ஹிம்பாக்கள். தீச் சுவாலையிலிருந்து கிளம்பும் புகை, வானளாவ உயர்ந்து சொர்க்கத்தை எட்டுமாம். அங்குள்ள இவர்களது மூதாதையருடன் இந்தப் “பூசாரி” பேசிக் கொள்வார்.
கிராமத் தலைவர் குடில் இது

ஒவ்வொரு கிரமத்திலும் இப்படியான புகையை ஏற்படுத்த, தனியனாக ஓர் இடத்தை ஒதுக்கி இருப்பார்கள். “okuruwo” என்று தங்கள் மொழியில் அழைத்துக் கொள்ளும் “புனிதத் தீ” இவர்கள் வாழ்வில் மிக முக்கியமானது. இது தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். இந்த இனத்தவரின் தலைவரது குடிலின் வாயில் மாத்திரம், இந்த தீயை நோக்கியதாக இருக்கும். வெளியார் எவருக்குமே, தீயிருக்கும் இடத்திற்கும், குடில் வாயிலுக்கும் இடையிலுள்ள இடத்தில் காலடி பதிக்க அனுமதி கிடையாது…..
தண்ணீரைக் காணாத பெண்கள் உலகம்
பாலைவனங்களில் ஒட்டகங்கள் வாரக்கணக்காக தண்ணீரைக் காண்பதில்லை. ஆனால் திடீரென்று தாராளமாக தண்ணீர் கிடைக்கும். தாராளமாகக் குடித்து, தங்கள் “லக்கேஜையும்”(ஏரி) பயணத்திற்காக நீரால் நிரப்பிக் கொள்கின்றன ஒட்டகங்கள். இந்த இனப் பெண்களின் உடம்பு தண்ணீரையே காண்பதில்லை என்பது ஒரு கலாச்சார வினோதம். பெண்கள் தங்கள் உடம்பை தண்ணீரால் கழுவிக் கொள்ள அனுமதியில்லை.. ஆடைகளையும்தான். கடும் வறட்சிகளைச் சந்தித்ததால் , இவர்களுக்கு சரித்திரம் கற்றுத் தந்த பாடம் இது. தன் உடல் சுகாதாரத்தைப் பேண, தினமும் “புகையில் நீராடுவது” இவர்கள் வழமை.
ஒரு கிண்ணத்தில் கனன்றுகொண்டிருக்கும் கரித்துண்டுகளின் மீது சில மூலிகை இலைகளையும், சிறு சுள்ளிகளையும் இட்டு புகையை உருவாக்குவார்கள். பின்பு குனிந்து, தமது உடலை புகைக்கு நேரே பிடிப்பார்கள். உடல் வியர்க்கும் .தமது உடலை ஒரு போர்வையால் மூடிக்கொண்டு இதைச் செய்யும்போது, உடல் நன்றாய் வியர்த்துக் கொட்டும்.(தடிமன், தொண்டை வரட்சிக்கு நாம் செய்வதுபோல). இந்த வியர்வைக் குளியல்தான் இவர்கள் குளியல்!
மக்கள் வாழ்வே வினோதந்தான்!
(ரங்க ராஜ்ஜியம்)