ஆபிரிக்காவின் விசித்திர கலாசாரம் – ஒரு பெண்ணுக்கு 30 மாடுகள்.!!
ஆபிரிக்காவின் கொம்பு என்று வர்ணிக்கப்படும் கிழக்கு ஆபிரிக்க நாடு இது..ஒரு இளஞன் மனிதனாக மாறுவதற்கு இடையில் ஒரு காளை மாடு குறுக்கே நிற்கின்ற கதைதான் இது..
Hamer என்று அழைக்கப்படும் இனத்தவரிடையே உள்ள ஒரு வினோதமான கலாச்சாரம் இது.இந்த இனத்தவர்கள் வாழும் ஓமோ பள்ளத்தாக்கு, ஓமோ ஆற்றிலிருந்து, எத்தியோப்பியாவின் தென் மேற்கில் உள்ள ஓர் ஏரி வரை நீள்கின்றது .இவர்களில் அனேகமானவர்கள் தொழில் ஆடுமாடுகளை மேய்ப்பதுதான்.
சிறுவயதிலிருந்தே பண்ணைகளைப் பற்றியும், கால்நடைகளை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியுமே பெரியவர்கள் இளையவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். . இவர்கள் கலாச்சாரத்தில் கால்நடைகள் வாழ்வில் முக்கிய இடம்பிடிக்கின்றன..
ஸ்பெயின் நாட்டில் காளை இளைஞர்களை புரட்டியெடுகின்றது. “மஞ்சு விரட்டு கேரள மாநிலத்திற்குரியது. காளைகள் கொண்டு, இளைஞர்களின் பலத்தைச் சோதிப்பதும், அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என்று நிரூபிப்பதும், ஒரு சடங்காக இவர்கள் கலாச்சாரத்திலும் இடம்பெற்று வருகின்றது.
ஒக்டோபர்-நவம்பரில்தான் இந்த விழா…
அச்சத்தை புறந்தள்ளிவிட்டு, காளையின் முதுகில் ஏறி அடக்கினால்தான், இளைஞன் “மனிதன்” ஆகலாம். திருமணமும் செய்து கொள்ளலாம்.
இந்த விழா இடம்பெறும் தினமன்று, 7 தொடக்கம் 10 வரையிலான காளைகளின் முதுகுகளில் , நான்கு தடவைகளாவது ஏறி உட்கார வேண்டும். தவறி கீழே விழககூடாது. விழுந்தால் பெண்ணெடுக்க முடியாது. இன்னும் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
மூன்று நுாற்றாண்டுகளாக தொடரும் சடங்கு இது…
வீட்டில் மூத்தவனே முதலில் இந்தச் சடங்கிற்கு உட்பட வேண்டும். இவன் தந்தையோ அல்லது மாமாவோ இந்தத் திகதியை தீர்மானிப்பார். சில சிறுவர்கள் ,சமூக அனுமதியுடன் தமது 5 வயதிலேயே இந்தச் சடங்கைச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
Boko என்றழைக்கப்படும் ஒரு குறுந் தடி, இந்தச் சடங்கில் ஈடுபடப்போகும், இளைஞனிடம் கொடுக்கப்படும் போது, நீ தயார் என்று தந்தை காட்டும் பச்சைக் கொடி அது!. இந்தத் தடியுடன் தனது உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் இளைஞன் , கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுப்பான். அழைப்புகள் நிறைவு பெற , இரண்டு மூன்று தினங்கள் எடுப்பது வழமை.
இங்கே நாட்காட்டிகள் கிடையாது.
திகதியை அறிவிக்க வேண்டாமா?
இதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் பல முடிச்சுக்கள் கொண்ட ஒரு சுற்றுக் கயிறு இளைஞனால் கொடுபடுவதுண்டு. மிக ஜாக்கிரதையாக இவர்கள் இந்தக் கயிற்றில் முடிச்சுப் போட்டிருப்பார்கள், முடிச்சுக்களின் எண்ணிக்கையில், விழா நடக்க இருக்கும் மீதி நாட்கள் கணிக்கப்படும்.
அந்த நாளில், எல்லோரும் ஒன்றுகூடுவார்கள்.
முதல் வேலையாக மது..
“லோக்கல் விஸ்கி”-அதாவது உள்நாட்டு உற்பத்தியொன்று வந்தவர்களுக்கு பருகக் கொடுக்கப்படும். சம்பந்தப்பட்ட இளைஞனின் சமூக செல்வாக்கிற்கேற்ப, 100 தொடக்கம் 300 பேர் வரையிலான விருந்தாளிகள் இங்கு வருவார்கள். பாரம்பரிய உடைகள் அணிந்து, கால்களில் கட்டிய மணிகள் ஒலிக்க, கொம்புகள் பலமாக ஊதும் சப்தம் காற்றில் பரவ, ஆடுவார்கள் இந்தப் பெண்கள்!இளம் பெண்கள் இந்த ஆடல்களுக்கு அழைக்கப்படுவதில்லை..
இந்த நடனத்திற்கு நடுவில், ஏற்கனவே இந்தச் சடங்கை முடித்துக் கொண்ட ஆண்களை அணுகி, தங்கள் முதுகில் birch என்ற இன மரத் தடிகளால் அடிக்கும்படி ஆடும் பெண்கள் கெஞ்சுவதுண்டு.
அடுத்தடுத்து அடிகள் விழுந்தாலும் இவர்கள் பின்வாங்குவதில்லை. அடிகளை அதிகமாக வாங்கிக் கொண்டு அதிகமான தளும்புகளுடன் நிற்பது , இளைஞனுக்கு காட்டும் விசுவாசம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
சூரிய அஸ்தமனம் வந்ததும், காளைகள் கொண்டுவரப்படுகின்றன. இலகுவில் பிடிப்பவரிடம் சிக்கிக் கொள்ளாத வகையில், இவற்றின் உடலில் ஒரு வகை மருந்து பூசப்படுகின்றது. தலைமுடி பாதி மழிக்கப்பட்டிருப்பதோடு, இளைஞன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்பது இங்கு கட்டாயம், இவன் பாவங்களைப் போக்கி, துரதிஷ்டத்தை விரட்ட, உடல் மண் கொண்டு “கழுவப்படுகின்றது”. அவனுக்கு போதிய பலத்தைக் கொடுக்கும்படி, உடம்பில் சாணத்தை பூசுவார்கள். ஆவிகளிலிருந்து பாதுகாக்க நீளமான மரப் பட்டைகள், அவன் உடலைச் சுற்றிக் கட்டப்படும்.
கொம்புகள் பலமாக சப்திக்க, மணியோசை காற்றில் பரவ, இளைஞன் ஒரு காளையின் முதுகில் பாய்ந்தேறுவான். தொடர்ந்து அடுத்தடுத்த காளைகளின் முதுகுகளில் பாய்ந்து உட்கார்ந்து விட்டு, தரையில் குதித்தால் இளைஞன் பெண்ணாளும் மனிதனாகி விடுவான்.
கீழே விழாது, நான்கு காளைகளின் முதுகளில் பாய்ந்து உட்கார்ந்து விட்டால் “டாக்ரரேட்” பட்டம் கிடைப்பது போல, Maza என்ற பட்டம் கிடைத்து விடும். வென்றவர் உடலில் ஒரு மிருகத் தோலைப் போர்த்தி, கைதட்டி மகிழ்சசியைத் தெரிவிப்பார்கள். இந்த வெற்றிக் கொண்டாட்டம் விடியும்வரை தொடரும்…
இந்த Mazaக்கள் நான்கு மனைவிமாரை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் மனைவியை தெரிவு செய்வது ஆணின் தந்தைதான். சீதனமாக ஆணின் தந்தை பெண்ணின் குடும்பத்திற்கு 30 பசுக்களை கொடுத்தாக வேண்டும்.
இத்தனை பாய்ச்சலுக்கு பிறகு கோதானம் வேறு….அதிஷ்டக்காரப் பெண்கள்தான்!
Thankyou :- ரங்க ராஜ்ஜியம்