கர்ப்பிணி பெண்ணுக்கு காரில் பிரசவம் பார்த்த தன்னார்வலர்கள்! சூடானில் போருக்கு மத்தியில் பூத்த மனிதம்
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போருக்கு மத்தியில், பெண் ஒருவர் காரில் குழந்தை பெற்றுள்ளார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி
சூடான் தலைநகர் கார்ட்டூமில் ராணுவ படைகளுக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வாரங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக சூடான் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கிடையில் சூடானின் கிழக்கு நைல் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வலியால் துடித்த மனைவியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடி இருந்ததால் கணவர் செய்வதறியாமல் நடுவழியில் தவித்துள்ளார்.
காரில் பிரசவம்
இந்நிலையில், மூன்று தன்னார்வலர்கள் வழியில் மருத்துவ சேவை செய்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் மூன்று பேரும் இணைந்து வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காரில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, இதனால் மகிழ்ச்சியில் திளைத்த தம்பதி, தன்னார்வலர்களையே குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பிறந்த ஆண் குழந்தைக்கு முண்டாஸிர் என்று தன்னார்வலர்கள் பெயர் சூட்டினர். முண்டாஸிர் என்பது வெற்றியாளர் என்பதை குறிப்பதாகும்
https://youtu.be/K41oG51p2P4