கடற்கரை மணலில் பச்சிளம் குழந்தையை புதைத்து கொலை செய்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்
சென்னையில் குளக்கரையில் பச்சிளம் குழந்தை ஒன்றை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் எனவும் குழந்தையின் தந்தை குமரேசன் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான குமரேசன். நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை, புதுவை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமானார்.
இந்த நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்தனர். பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். நேற்றிரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர்.
இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர். இதற்கிடையே புதுக்குப்பம் கடற்கரையில் இன்று (16-04-2023) காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருமாம்பாக்கம் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பில் தகவலறிந்த குமரேசன் சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தைதான் என்பது தெரியவந்தது. அவர்கள் அழுது துடித்தனர்.
பொலிஸார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பச்சிளம் குழந்தையை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.