ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : 500 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கோடி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையை டிரம்ப் தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் நடிகைக்கு கொடுத்ததாகவும் பின்னர் அந்த தொகையை தேர்தல் பிரசார நிதியில் இருந்து எடுத்து வக்கீலுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் டிரம்ப் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
இந்த நிலையில் தனது முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் மீது டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கோஹனின் இது போன்ற தொடர்ச்சியான மற்றும் முறையற்ற நடத்தை உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் சட்டப்பூர்வ தீர்வை தேடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி 500 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது