பிரான்ஸில் ஆல்பஸ் மலைத்தொடரில் பயங்கர நிலச்சரிவு! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது.
குறித்த மலைத்தொடரின் தென்மேற்கு பகுதியில் மிக உயரமான சிகரம் என கருதப்படும் மோன்ட் பிளாக் அமைந்துள்ளது.
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (09-10-2023) இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதில் சிலர் இங்குள்ள அர்மான்செட் பனிப்பாறையில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர்.
இதன்போது, திடீரென அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டு ராட்சத பனிப்பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் பனிச்சரிவில் சிக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடனும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இருப்பினும், இந்த பனிச்சரிவில் சிக்கி 3 சுற்றுலா பயணிகள், உள்ளூரை சேர்ந்த 2 வழிகாட்டிகள் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
மேலும் சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.