கோடை காலத்தில் வயதானவர்கள் இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமா
கோடை காலம் என்றாலே வெளியே செல்லும் போது கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.
அதிலும் வயதானவர்களாக இருந்தால் சருமத்தை சூரிய ஒளிப் பாதிப்பில் இருந்து கூடுதலாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் வயதானவர்கள் சூரிய ஒளிப் பாதிப்பால் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளிப் பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தோல் புற்றுநோயை சந்திக்கின்றனர்.
இதில் அதிகமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வயதானவர்கள் கோடை காலத்தில் வெளியே செல்லும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்
சன்ஸ்க்ரீன் என்பது இளைய வயதை உடையவர்களுக்கு மட்டுமல்ல வயதானவர்களும் கோடை காலத்தில் பயன்படுத்தலாம்.
இது சருமத்தை தீங்கு விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து காக்கிறது. குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.
இது சருமத்திற்கு மேல் ஒரு பாதுகாப்பு லேயராக செயல்பட்டு உங்களை காக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் சருமம் சிவந்து போதலை தடுக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்லுங்கள்
சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பார்வை திறனை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே வயதானவர்கள் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து கொள்வது அவசியம்.
இந்த சன் கிளாஸ்கள் சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது கண்களையும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்கிறது.
வயதானவர்கள் சன் கிளாஸ் அணியாமல் வெளியே செல்லும் போது கண் அழற்சி, கண்புரை, மாகுலர் சிதைவு, கண்களைச் சுற்றி சரும புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
எனவே இதைத் தவிர்க்க சன் கிளாஸ் அணிவது மிகவும் அவசியம்.
சரியான ஆடையை தேர்ந்தெடுங்கள்
கோடைகாலத்தில் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
இது அதிகப்படியான வியர்வையை தடுக்க உதவுகிறது. கோடை காலத்தில் வயதானவர்கள் இலகுவான பருத்தி ஆடைகளை அணியலாம்.
நீண்ட தூரம் செல்வதாக இருந்தால் தலைக்கு தொப்பியை அணிந்து செல்லுங்கள். கோடை காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை பாக்டீரியா தொற்றுக்களை உங்களுக்கு உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
புதிய பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
கோடை காலத்தில் வயதானவர்கள் உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதற்கு தகுந்தாற் போல் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்ற நீர்ச்சத்துடன் கூடிய பழங்களை சாப்பிட வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.
அதே நேரத்தில் ஆல்கஹால் மற்றும் காபி போன்ற பானங்கள் பருகுவதை தவிருங்கள். ஏனெனில் இந்த பானங்கள் நீரிழப்பை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது.