கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி : 14 வயது மாணவன்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக போலி அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர் நேற்று (25) மாலை அவசர அழைப்புப் பிரிவுக்கு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த அழைப்பின் பிரகாரம், அதிகாரிகள் விமான நிலைய முனையத்தை சோதனையிட்டுக்கொண்டிருந்தசில நிமிடங்களின் பின்னர் அந்த மாணவர் மீண்டும் தொலைப்பேசி அழைப்பை எடுத்து, தான் கேலியாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, களுபோவிலவில் வசிக்கும் மாணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதில், இந்தச் செயலின் பாரதூரம் தெரியாததால் அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து அந்த மாணவரை கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.