Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பின் அடுத்த தேர்தல் பூச்சாண்டிதான் திலீபன் நாடகம் : டக்ளஸ் சாடல்.!!

 “மாகாண சபை முறைமையை ஒழுங்குறப் பயன்படுத்தி, அதனை வலுப்படுத்த இயலாத கையாலாகாதவர்கள் இன்று, 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்தியாவிடம் போகப் போவதாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பகிரங்கமாக இவ்வாறு அறிக்கைவிட்டுக் கொண்டே, அடுத்து வரப் போகின்ற மாகாண சபைத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகியும் வருகின்றார்கள் என்பதற்கு இப்போது இந்தக் கூட்டத்தினர் கையில் எடுத்துக் கொண்டுள்ள ‘திலீபன் நினைவேந்தல்’ நிகழ்ச்சி நிரல் எடுத்துக் காட்டாக அமைந்து வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அதாவது, இந்தியாவுக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், குழப்பங்களைத் தூண்டும் வகையிலும், இந்தியாவுடன் பகைமையை வளர்க்கும் வகையிலும், அன்று உண்ணாவிரதம் இருந்த திலீபனை நினைவு கூறுகின்ற விடயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்கென தயாராகி வருகின்றனர்.

கூட்டமைப்பின்,தேர்தல் பூச்சாண்டி,திலீபன்,நாடகம்,டக்ளஸ்,சாடல்.!


இதன் மூலமாக தாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட்டுள்ளதாகவும் வெளியில் காட்ட முனைகின்றனர். அதாவது, தனித்து நின்று கடந்த தேர்தலில் கண்ட தோல்வியை இந்த போலி ஐக்கிய தோற்றப்பாட்டில் சரி செய்து கொள்ளலாம் என பகல் கனவு காண்கின்றனர். இது, வாக்குக் கொள்ளைக்கான ஐக்கியமே அன்றி, மக்கள் நலன்சாரந்த ஐக்கியமல்ல என்பதை எமது மக்கள் அறியாமல் இல்லை.

இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி, சரிந்து போகின்ற தங்களது அரசியல் நிலைமையை எமது மக்களிடையே மீள தூக்கி நிறுத்தலாம் என இவர்கள் கனவு காண்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த திலீபன் நினைவு விடயத்தை கையில் எடுக்காவிட்டால் தமிழ்த் தேசிய பூச்சாண்டி காட்டும் அரசியலிலிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில் அதி உச்ச போலி தமிழ்த் தேசிய அட்டைப்பெட்டிகளும் இந்தக் கூட்டுத்துடன் சேர்ந்து, கும்மாளமடித்து வருகின்றனர்.

இவர்களது இந்த அரசியல் நாடகமானது எமது மக்களை மீண்டும் பலிக்கடாக்களாக்கி, அதன் மீதமர்ந்து தங்களது சுயலாப அரசியலை முன்னெடுப்பதன் நோக்கத்துடன் கூடியதாகும். இதனை எமது மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

திலீபன் இறக்கின்ற தருவாயில் அதாவது 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதியளவில், அதுவரையில் புலிகளால் உரிமை கோரப்பட்ட, புலிகள் தரப்பிலிருந்து இறந்தவர்களை மேற்கோள்காட்டி, ‘மறைந்த 651 உறுப்பினர்களுடன் 652வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். புரட்சி வெடிக்கட்டும்” எனக் கூறியிருந்தார்.

அன்று திலீபனைப் பார்த்து ‘நீ முன்னால் போ, நான் பின்னால் வருகிறேன்’ எனக் கூறிய புலிகள் இயக்கத் தலைவர், தான் போகும்போது எமது மக்களில் எத்தனை ஆயிரம் உயிர்களை முள்ளிவாய்க்கால் வரையில் சென்று, கொண்டு சென்றார் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

யுத்த காலத்தில் பலரது கண்டனங்களுக்கும், அனுதாபங்களுக்கும் உள்ளான ‘கந்தன் கருணை’ படுகொலைகளின் போது, மாற்று இயக்க உறுப்பினர்களையும், கப்பம் கோரப்பட்டு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்களையும் துடிக்கத் துடிக்க கொலை செய்த கொடூரத்தில் முக்கிய பங்கினையும்,

மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு கொலைகள், நல்லூர் கோவில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளில் பங்கு வகித்திருந்த திலீபன், இன்று திலீபனை நினைவு கூறுவதற்காக கையொப்பம் இடுகின்ற தமிழ்க் கட்சிகளின் முக்கிய தலைவர்களை, உறுப்பினர்களை எல்லாம் கொன்றொழித்தவர் என்பதை இந்த தமிழ்க் கட்சிகளின் இன்றைய தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் தங்களது சுயலாப அரசியலுக்காக மறந்திருக்கலாம். ஆனால், எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதனை அன்றே ஏற்று, ஒழுங்குற செயற்படுத்த முனைந்திருந்தால், பிற்கால அழிவு யுத்தமும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், சொத்திழப்புகளும், உடல் உறுப்புகளின் இழப்புகளும் என நிகழ்ந்நிருக்காது.

புரட்சி வெடிப்பதற்கு பதில் எமது மக்கள் சமூகத்தில் அனைத்துத் துறைகள் சார்ந்தும் வறட்சியே வெடித்திருக்கின்றது.

எனவே, எமது மக்களை தங்களது சுயலாப வங்குரோத்து அரசியலுக்காக மீண்டும், மீண்டும் பலிக்கடாக்களாக்காமல். எமது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை துன்ப, துயரங்களில் தள்ளிவிடுகின்ற செயற்பாடுகளை இவர்கள் நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்பதையே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

யுத்தம் காரணமாக இறந்தவர்களை நினைவு கூறுவதற்கென ஒரு பொது நினைவுத்; தூபியும், அதற்கென குறித்தொதுக்கப்பட்ட ஒரு தினமும் வேண்டும் என நான் நாடாளுமன்றத்திலே தனியொரு ஆளாக நின்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்தபோது, அதனை வலிமொழிவதற்கே வராத இந்த போலி தமிழ்த் தேசியத் தரப்பினர், இன்று தங்களது சுயலாப நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு திரட்டுவதானது வேடிக்கiயாக இருக்கின்றது.”  என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments