வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து, இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
மேலும் தெரியவருகையில்,
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் நீண்ட காலமாக காணிப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதமையினால் குறித்த குடும்பப் பெண் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப்பொதியினுள் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடனும் காணிப்பிரச்சினை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதையினையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலமை காணப்பட்டதுடன் வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விஜயம் மேற்கொண்டதுடன் பெண்ணின் பயணப்பொதியினுள் இருந்த மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியையும் மீட்டெடுத்தனர்.
அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு காணிப்பிரச்சினைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்தமையை அடுத்து இந்த சிக்கல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குறித்த பெண் தெரிவிக்கையில்,
எனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்குபரப்பு காணி கடந்த 2006ஆம் ஆண்டு எழுத்துமூலமாக வழங்கப்பட்டது.
தற்போது எனது கணவன் இறந்தநிலையில் அந்த காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதுடன் 2010ஆம் ஆண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார்.
எனவே கணவன் இறந்தநிலையில் எனக்கு கிடைக்கவேண்டிய காணியினை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த காணி 1981ஆம் ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments