தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் இரு இலங்கை தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து, கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் ஒன்றான, டியாகோ கார்சியா என்னும் தீவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகள் நேற்றைய தினம் (02-04-2023) முதல் தடவையாக, நீண்ட கால போராட்டத்தின் பின், அந்த பிராந்திய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

23 6429536999026

இது கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த தமது சட்டரீதியான போராட்டத்துக்கு கிடைத்த முதல்படியான வெற்றியாகும் என இந்த இருவருக்காகவும் போராடிய மூத்த சட்ட ஆலோகர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முக்கிய வெற்றியானது, அந்தத் தீவில் சிக்கியள்ள ஏனைய தமிழர்களுக்கும், பிரித்தானியாவில் புதிதாக அரசியல் தஞ்சம் கோரிய நிலையில், ருவண்டாவுக்கு அனுப்பபடலாம் என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் நிரந்தர குடிமக்கள் இல்லை. 1960கள் மற்றும் 1970களில் பூர்வீக சாகோசியன் மக்களை, இங்கிலாந்து பிரித்தானிய – அமெரிக்க படைகள் தமது கூட்டு இராணுவத் தளத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றினர்.

23 64295369dd213

தற்போது இந்த தீவு பிரித்தானி்ய ஆளுகையின் கீழ் வந்தது. கடந்த 2021 ஒக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு வந்த முதல் 89 தமிழ் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களில் 22 வயதான ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் 22 வயதான அஜித் சஜித்குமார் ஆகிய இருவரும் அடங்குவர்.

இந்தியாவிலிருந்து புறப்பட்டு, கனடா செல்லும் வழியில் அவர்களின் படகு இந்த தீவுக்கு அருகில் பழுதடைந்ததை அடுத்து அவர்கள் பிரிந்தானிய மற்றும் அமெரிக்க கடற்படைகளால் மீட்கப்பட்டனர்.

அவர்களை இலங்கை மற்றும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முற்பட்ட வேளை, பிரித்தானியாவில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தலையிட்டு, இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

இறுதியில் சட்ட முன்னெடுப்பின் விளைவாக, அவர்களது அரசியல் தஞ்ச கோரிக்கைகளை பரிசீலிக்க பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரித்தானிய இந்திய கடல்கடந்த ஆள்புல நிர்வாகம் (BIOT) சம்மதித்தது. இதற்காக இந்த தீவுக்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, 2022 இல் இலங்கையில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆக உயர்ந்தது.

ஆனால் பலர் இலங்கைக்குத் திரும்புவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் வழங்கிய பணத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்கு சம்மதித்தனர். வேறு சிலர் தாங்களாக முன்வந்து பிரான்ஸ் தீவான ரியூனியனில் தஞ்சம் கோருவதற்கு ஒப்புக்கொண்டனர்.

எஞ்சிய 68 புகலிடக் கோரிக்கையாளர்களில், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பலர் உள்ளடங்கியுள்ளனர்.

1980 களில் உயிர்பாதுகாப்பு தேடி கடல்மூலம் இந்தியா தப்பிச்சென்று, அகதிமுகாம்களில் வாழும் பெற்றோருக்கு பிறந்து, அகதிமுகாமிலேயே வளர்ந்த இளைஞர்களும் இதில் அடங்குவர்.

கடந்த 18 மாதங்களாக, இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தீவில் உள்ள முள்வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பலமாதங்கள் எந்த தொலைபேசி வசதியும் வழங்கப்படவில்லை. தற்போது மிக மட்டுப்படுத்தப்பட தொடர்பாடல் வசதிகளே உள்ளன. அங்கு பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது எனவும் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

இங்கு உள்ள நிலை காரணமக பலரின் உடல்நிலை மற்றும் மனநிலை கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. தீவில் உள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோம் என்று உறுதியளிக்கக் கோரி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்

. தற்போது 50 க்கும் மேற்பட்டோர்களது தஞ்சம் கோரும் கோரிக்கைகளை இங்கிலாந்தின் கீழ உள்ள BIOT அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் “நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில், BIOT ஆணையாளர் Paul Candler, புகலிடக் கோரிக்கையாளர்களிடம், எவரும் இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற வகையில் பிரித்தானிய சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து பல பிரித்தானிய அதிகாரிகள் தீவுக்கு சென்று அங்கு இருப்பவர்களை தமது கோரிக்கைகளை கைவிட்டு இலங்கை திரும்பும்படி பலவகையிலும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

ஒரு பிரித்தானிய அதிகாரி அரசியல் தஞ்சம் கோரியவர்களை “குற்றவாளிகள்” என்று ஏழனப்படுத்தியது மட்டுமன்றி, அவர்களை எந்த ஐரோப்பிய நாடும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் நீங்கள் இலங்கைக்கு நாடுகடந்தப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலின் விளைவாக, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை மற்றும் இந்திய அகதிமுகாம்களில் இடம்பெற்ற துஸ்பிரயோகம் என்பவற்றில் மிகவும் ஏற்கனவே பாதிப்பப்பட்டிருந்தவர்களின் மனநிலை மேலும் மோசமடைந்தது.

இதன் விளைவாக, ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் உட்பட ஐவர் சவர அலகு, தூண்டில் ஊசி உட்பட்ட கூர்மையான உலோகப் பொருட்களை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.

இதனைத்தொடர்ந்து 5 பேரும் அவசர மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக ருவாண்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பரில் 2021 இருந்து இந்த அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களை சட்ட ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டனை தளமாகக் கொண்ட  மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம், Leigh Day என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன், இவர்களை டியாகோ கார்சியாவிற்கு மீண்டும் கொண்டு செல்வதை தடுக்க பிரித்தானியாவில் உள்ள ஒரு உயர்நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவைக் கோரியிருந்தார்.

இதே நேரம் பிரித்தானியாவில் உள்ள “சித்திரவதையில் இருந்து விடுதலை” உட்பட்ட அமைப்புக்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் மூலம் மருத்துவ ரீதியான ஆதாரங்களை பெற்று சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிக விரிவான வாதங்களையும் முன்வைத்திருந்தார். இந்த வாதங்களில் அடிப்படையில் நேற்றய தினம், ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் ஆகியோரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் இலங்கைக்கு நாடுகடந்தப்பட மாட்டார்கள் எனவும் BIOT உத்திய்யோகபூர்வமாக எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, அவர்கள் பாதுகாப்பான மூன்றாவது நாட்டுக்கு விரைவில் அனுப்பபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 6429536a3c636
இந்த வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கீத் குலசேகரம்,

“டியாகோ கார்சியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் பலர் இலங்கை அரசபடைகளால் சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

இலங்கையில் இன்று வரை சித்திரவதை தொடர்வதால், இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”. என்று தெரிவித்தார்.

ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் ஆகிய இருவரின் கோரிக்கைகள் பற்றி பேசும்போது “இருவருக்கும் வலுவான மருத்துவ ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தோம். அவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்றும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தற்கொலைக்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

இருப்பினும், ஆரம்பத்தில் BIOT அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை. அதன்விளைவாக இருவரின் மனநிலை மேலும் மோசமடைந்து அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அவர்கள் மிக மோசமான நிலையில் ருவண்டா கொண்டு செல்லப்பட்ட பின்னர், நாங்கள் மேலதிக மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பித்து, உயர்நீதிமன்றில் வழக்கையும் ஆரம்பித்தோம்.

இதன் பின்னரே BIOT அவர்களுடைய கோரிக்கையை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ருவாண்டாவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களும் இருவருடைய கோரிக்களை வெற்றிபெறுவதில் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“டியாகோ கார்சியாவில் தற்போது பரிசீலிக்கப்படும் ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பில் இந்த நிகழ்வு சாதகதான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன் டியாகோ கார்சியா மற்றும் ருவண்டாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான போதிய சிகிச்சை வசதிகள் இல்லை என்பதும் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளதானது இன்னொரு முக்கிய விடயமாகும்.

இது பிரித்தானியாவில் இருந்து ருவண்டாவுக்கு அனுப்பப்படவுள்ள புதிய அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களை காப்பாற்ற உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஊடகங்களிற்கு பேசிய ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் ஆகிய இருவரும் கீத் குலசேகரம் அவர்களின் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்றும், ஏனைய பல சட்டத்தரணிகள் கைவிட்ட பின்னரும் தொடர்ந்து போராடி தமது உயிரை காப்பாற்றியதுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதுவே முதலாவது வெற்றி என்றும், இது தமக்கு மட்டுமன்றி மற்றவர்களுகளுக்கும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

தற்போதைய BIOT இன் முடிவு தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இன்னும் எவ்வளவு காலம் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று கவலைப்படுகிறேன்” எனவும் ஹம்சிகா கூறியுள்ளார்.

கீத் குலசேகரம் பாதிக்கப்பட்டவர்களின் இந்த அரசியல் தஞ்சகோரிக்கை வழக்குகளை இலவசமாகவே செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button